“நிரவ் மோடி லண்டனில் இருக்கிறார்” - மத்திய அரசு விளக்கம்
வங்கியில் பணமோசடி செய்துவிட்டு தப்பியோடிய நிரவ் மோடி லண்டனில் இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினரும் சட்ட விரோதமாக கடன் வாங்கி ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாகியுள்ள நிரவ் மோடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் தங்கியிருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய அரசிற்கு தகவல் தந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மான்செஸ்டரின் தேசிய மத்திய பணியகம் இத்தகவலை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக ராஜ்ய சபாவில் பேசிய வெளிவிவகாரங்களுக்கான இணையமைச்சர் விகே சிங் தெரிவித்தார். “நிரவ் மோடியை நாடு கடத்துமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சார்பில் இங்கிலாந்து அதிகாரிகளிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் கோரிக்கை வைவைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை தற்போது அங்குள்ள அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக நிரவ் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியிருந்தது. அதாவது நிரவ் மோடி வெளிநாடு தப்பி செல்லும் திட்டம் பிரதமர் மோடி மற்றும் அருண் ஜெட்லிக்கு ஏற்கெனவே தெரியும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

