'அபராதம் கட்டக் கூட பணமில்லை'- தவணையில் செலுத்த நிரவ் மோடிக்கு பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி

'அபராதம் கட்டக் கூட பணமில்லை'- தவணையில் செலுத்த நிரவ் மோடிக்கு பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி
'அபராதம் கட்டக் கூட பணமில்லை'- தவணையில் செலுத்த நிரவ் மோடிக்கு பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி

நீதிமன்ற கட்டணம், அபராத  தொகையை தவணை முறையில் மாதந்தோறும் 10,000 பவுண்டுகளாக (சுமாா் ரூ.9.7 லட்சம்) செலுத்த நிரவ் மோடிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபா் நீரவ் மோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு கடந்த 2018-ல் இந்தியாவிலிருந்து லண்டனுக்குத் தப்பிச் சென்றார்.  பின்னர் இந்திய அரசின் வலியுறுத்தலின் அடிப்படையில், 2019-ம் ஆண்டு நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் இந்தியாவிலிருக்கும் நிரவ் மோடியின் சொத்துகள் மத்திய அரசால் முடக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, நிரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான வேலையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த விவகாரத்தில், தற்போது லண்டன் சிறையிலிருக்கும் நிரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப லண்டன் நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதியளித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக பிரிட்டன் உயா் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மேல்முறையீடு செய்தாா். அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடா்ந்து பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கோரி அளித்த மனுவை உயா் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் நிராகரித்தது. மேலும், நீதிமன்ற கட்டணங்கள், அபராத தொகையாக 150,247 பவுண்டுகளை (சுமாா் ரூ.1.46 கோடி) செலுத்த நீரவ் மோடிக்கு உத்தரவிட்டது.

இந்த தொகையை மாதந்தோறும் 10,000 பவுண்டுகளாக (சுமாா் ரூ.9.7 லட்சம்) செலுத்த அவா் கோரிய நிலையில், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எந்த தொகையையும் இதுவரை செலுத்தாத நிலையில், அது தொடா்பாக லண்டனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டது. அப்போது நீரவ் மோடி காணொலி வழியாக விசாரணைக்கு ஆஜராகி, தனது சொத்துகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தொகையை செலுத்தத் தன்னிடம் போதிய பணம் இல்லை என்றும் தெரிவித்தாா்.

இதனைக் கேட்ட நீதிமன்றம், ஏற்கெனவே கூறியபடி கட்டணங்கள் மற்றும் அபராதத் தொகையை மாதந்தோறும் 10,000 பவுண்டுகளாக செலுத்துவதற்கான பணம் எங்கிருந்து அவருக்குக் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியது. அதற்குத் தான் கடன் வாங்கி வருவதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக அதைச் செய்து வருவதாகவும் பதிலளித்தாா்.

இதையடுத்து நிலுவைத் தொகையை மாதந்தோறும் 10,000 பவுண்டுகளாக (சுமாா் ரூ.9.7 லட்சம்) செலுத்தலாம் என்றும், அதன் பிறகு மறு ஆய்வு விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் கூறியது. இதன் காரணமாக நீரவ் மோடி எப்போது இந்தியாவுக்குத் திரும்புவார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com