போலி பாஸ்போர்ட்கள் மூலம் நாடுகள் தாவும் நிரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடி, போலி பாஸ்போர்ட்கள் மூலம் பல நாடுகள் பயணம் செய்து வருகிறார்.
மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னரே அவர், வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டார். அவ்வாறு சென்ற அவர் இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, அவரது பாஸ்போர்ட்டை முடக்கியது.
அத்துடன் அவர்மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நிரவ் மோடி இங்கிலாந்தில் இல்லை என்றும், அவர் தற்போது பெல்ஜியத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஸ்போர்ட் முடக்கப்பட்ட பிறகு அவர் எவ்வாறு பல நாடுகளுக்கு பயணிக்கின்றார் என்ற பார்த்தபோது, அவர் பல போலி பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் தகவல் வெளிவந்துள்ளது. அதன்மூலமே அவர் பாரிஸ், பிரான்ஸ் உட்பட பல நாடுகளுக்கு விமானம் மூலம் பயணித்துள்ளார். குறிப்பாக நிரவ் மோடி சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பயணிப்பதாக கூறப்படுகிறது.