காரும் லாரியும் நேருக்குநேர் மோதல் - புனே விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிராவிலுள்ள புனே அருகே இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள நெடுஞ்சாலையில் கடம்வாக்வஸ்தி பகுதி அருகே அதிகாலை 1.30 மணியளவில் கார் ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர்,“நாங்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி மாருதி எர்டிகா கார் ஒன்று ‘நோ என்டிரி’ பலகையை மதிக்காமல் இந்தச் சாலைக்குள் வந்துள்ளது. அப்போது அந்த காரும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனையடுத்து காரின் டிரைவர் உள்ளிட்ட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் ராய்கர் பகுதியிலிருந்து காரில் அவர்களின் சொந்த ஊரான யாவத்துக்கு சென்றுகொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் வயது 18 முதல் 23 வரை இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.