மும்பை: காவல்துறைக்கு சொந்தமான காரை பறிமுதல் செய்தது என்.ஐ.ஏ.
மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டினருகே வெடிபொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த காரை இழுத்துவர பயன்படுத்திய காவல்துறைக்கு சொந்தமான காரை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த மாதம் 25 ஆம் தேதி கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. காரில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டிருந்த நிலையில், அது யாருக்குச் சொந்தமானது என காவல்துறை விசாரணை நடத்தி வந்தது.
வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில், மும்பை குற்றப்பிரிவு காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சச்சின் வாஸி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், வெடிபொருட்களுடன் நிரப்பப்பட்ட காரை அம்பானி வீட்டின் அருகே நிறுத்துவதற்காக, மற்றொரு கார் மூலமாக இழுத்து வந்துள்ளனர்.
விசாரணையில், அந்தக் கார் மும்பை காவல்துறைக்கு சொந்தமான கார் என தெரியவந்த நிலையில், அதை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்துள்ளனர்.