
கேரள மாநிலம் களமச்சேரி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் யாகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பின் மூன்று நாள் கூட்டத்தின் இறுதி நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. காலை 9.30 மணியளவில் தொடங்கிய கூட்டத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். இதையடுத்து கூட்டம் தொடங்கி சுமார் பத்து நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
இதையடுத்து, அடுத்த சில விநாடிகளில் மேலும் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில், பெண்கள் இருவரும், ஒரு சிறுமியும் உயிரிழந்தனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிகுண்டு வெடித்தது குறித்து தகவல் அறிந்ததும் கொச்சி தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலில் IED வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தலைவர் ஷயிக் தர்வேஷ் சாகிப் தெரிவித்தார். மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வெறுப்பு பரப்புரைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தநிலையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது தாம்தான் எனக் கூறி டொமினிக் மார்ட்டின் என்பவர் காவல்துறையில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவர்தான் குற்றவாளி என உறுதி செய்துள்ளனர். இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.