எவரெஸ்ட் சிகரத்தில் 10 முறை ஏறிய வீரர்... மலையிலிருந்து இறங்கியபோது பலியான சோகம்!

நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலை உச்சி மீது ஏறிச் சாதனை படைத்த அயர்லாந்து வீரரான நோயல் ஹன்னா, இறங்கியபோது உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவரெஸ்ட் சிகரம்
எவரெஸ்ட் சிகரம்file image

உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியை அளிப்பதில் மலையேற்றமும் சிறந்து விளங்குகிறது. இன்றைய தலைமுறையினரில், பலர் மலையேற்றத்தை விரும்புகின்றனர். இதில் தொடர்ந்து ஏறிச் சாதனை படைப்பவர்களும் உண்டு. அதிலும் உலகின் உயரமான 14 மலைகளில் 8 நேபாளத்தில் உள்ளன. இதில் எவரெஸ்ட்டும் அடக்கம். இம்மலைகள் மீது ஏறவே பல வீரர்களும் ஆசைப்படுகின்றனர். இதனால் சுற்றுலாத் துறைக்கு வளர்ச்சி ஏற்படுவதுடன் வீரர்களுக்கும் உற்சாகம் கிடைக்கிறது.

அந்த வகையில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்தவர், நோயல் ஹன்னா. மலையேறும் வீரரான இவர், உலகின் 10வது உயரமான சிகரம் என அழைக்கப்படும் அன்னபூர்ணா உச்சியில் இருந்து இறங்கும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குமுன் 10 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவரான நோயல், நேற்று 8,091 மீட்டர் (26,545 அடி) உயரம் கொண்ட அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தார். இருப்பினும், அவர் சிகரத்திலிருந்து இறங்கியபோது, உயிரிழந்ததாக மலை ஏறும் வீரர்களை கவனித்து வரும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எவரெஸ்ட் சிகரம்
எவரெஸ்ட் சிகரம்file image

தவிர, அதேமலையில் ஏறிய இந்திய வீரர் ஒருவரையும் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அன்னபூர்ணா மலையில் ஏறிக்கொண்டிருந்த இன்னும் இரண்டு இந்திய வீரர்கள், மோசமான வானிலையில் சிக்கி பின் மீட்கப்பட்டதாகவும் ஹைக்கிங் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ”குறைந்தபட்சம் 365 பேர் அன்னபூர்ணாவில் ஏறியுள்ளனர், அதில் 72 க்கும் மேற்பட்டோர் மலையின் பனிச்சரிவில் சிக்கி இறந்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.

அன்னபூர்ணா சிகரத்தில், அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அப்பகுதி ஆபத்து நிறைந்தது எனக் கருதப்படுகிறது. ஆனாலும் அதையும் மீறி மலையேற்றத்தில் வீரர்கள் ஈடுபடுகின்றனர். கடந்த வாரம், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மூன்று நேபாள வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நோயலின் மரணமும் நிகழ்ந்துள்ளது சோகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com