பாஜகவின் அடுத்த தலைவர் யார்? தெற்குப் பக்கம் வலைவீசும் தலைமை!
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் உள்ளது. பாஜக ஆட்சியமைப்பதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பங்கைத் தவிர்த்து பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் பங்கும் அடங்கியிருக்கிறது. அவர் பாஜகவின் தேசிய தலைவராக 2020ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2024 ஜனவரியிலேயே நிறைவு பெற்றாலும், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் காரணமாக அது நீட்டிக்கப்பட்டது. தற்போது அவர் மத்திய அமைச்சராகவும், மாநிலங்களவை தலைவராகவும் உள்ளார்.
இந்த நிலையில் பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார் என்பது பற்றிய பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. ஜெ.பி.நட்டாவைப் போன்றே ஒரு சிறந்த தலைவரை அங்கு நியமிக்க பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் வரும் ஆண்டுகளில் பாஜக தெற்கில் அதிக கவனம் செலுத்த இருக்கிறது. இதனால், அடுத்த பாஜக தலைவர் தெற்கிலிருந்து வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
அதன்படி, ஆந்திராவின் பாஜக தலைவராக இருந்தவரும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டியின் பெயர் பரவலாகப் பேசப்படுகிறது. தற்செயலாக, அவர் பங்காரு லட்சுமணனை உருவாக்கிய தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர், அவர் பாஜகவின் தேசியத் தலைவராக 2000-2001 ஆண்டுகளில் இருந்தார். அடுத்து இந்தப் பட்டியலில் NDA ஆளும் மாநிலமான ஆந்திராவில் பாஜக தலைவராக இருக்கும் டக்குபதி புரந்தேஸ்வரி. அவர் ஒரு பெண் என்பதோடு என்.டி.ராமாராவின் வம்சாவளியைச் சேர்ந்தவர். தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடுவின் உறவினர். இதனால் அங்கு மோதலைத் தவிர்க்க முடியும் என பாஜக கருதுகிறது.
இவர்களைத் தவிர்த்து பாஜக மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவரும், கோயம்புத்தூரைச் சேர்ந்த எம்.எல்.ஏவுமான வானதி ஸ்ரீனிவாசன் பெயரும் அடிபடுகிறது. இவர்களைத் தவிர, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தர்மேந்திர பிரதான், வினோத் தவ்டே மற்றும் பூபேந்திர யாதவ் ஆகியோரின் பெயர்களும் இடம்பிடித்து வருகின்றன.
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அமைப்பில் அனுபவம் மிக முக்கியமானது என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. பாஜக சட்ட விதிகளின்படி, வேட்பாளர்கள் கட்சியில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எனவே, சமீபத்தில் இணைந்தவர்கள் விலக்கப்படும்போது, தெற்கிலிருந்து வேட்பாளர்கள் வரம்பிற்குட்பட்டவர்களாகவே இருப்பார்கள்.