சந்திரயான் 3 லேண்டர் நாளை மாலை நிலவின் தென்பகுதியில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் சந்திரயான் லேண்டரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் எவ்வாறு கண்காணிப்பார்கள் என்றும் விரிவாக பார்க்கலாம்.
சந்திரயான் மூன்று லேண்டர் இன்னும் 24 மணி நேரத்திற்குள் நிலவின் மேற்பரப்பில் பத்திரமாக தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான முன்னேற்பாடாக குறைந்தபட்ச சுற்றுவட்ட பாதையில் தற்போது 25 முதல் 30 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டர் சுற்றி வருகிறது. இந்நிலையில் நாளை மாலை 6:04 மணிக்கு நிலவின் தென் பகுதியில் லேண்டர் தரையரங்க உள்ளது. தற்போது லேண்டர் சுற்றிவரும் குறைந்தபட்ச உயரம் நிலவின் தென் பகுதியை நோக்கி இருக்குமாறு தற்போது விண்கலத்தின் பாதை மாற்றப்பட்டுள்ளது.
ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை லேண்டர் நிலவை சுற்றி வரும் நிலையில் அடுத்து 8 முதல் 10 முறை நிலவை லாண்டர் சுற்றி வரும். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் நிலவின் மேற்பரப்பில் உள்ள, தரையிறங்க வேண்டிய பகுதிகளை லேண்டரில் உள்ள சென்சார்கள் மற்றும் கேமராக்கள் தொடர்ச்சியாக நோட்டமிடும். அந்தத் தகவல்கள் அனைத்தும் லேண்டர் ஆண்டனாக்கள் மூலமாகவும், சந்திரயான் 2 ஆர்ப்பிட்டர் மூலமாகவும் பூமியில் உள்ள கட்டளை மையத்திற்கு தெரிவிக்கப்படும்.
இந்நிலையில் தரையிறங்க வேண்டிய பகுதிகள் குறித்தான புகைப்படங்கள் ஏற்கனவே சந்திரயான் 2 ஆர்பிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு முறை நிலவை லேண்டர் சுற்றும் போதும் நிலவின் அட்ச தீர்க்க ரேகைகளை கணக்கிட்டு செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்கனவே எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்துள்ள புகைப்படத்தையும் ஒப்பீடு செய்யும். அதன் பின்னர் தகவல்களும் விண்கலத்தின் செயல்பாடுகளும் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் நாளை மாலை 5.30 மணி அளவில் இருந்து லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான பணிகள் தொடங்கும்.
குறிப்பாக 5:45 மணியில் இருந்து லாண்டர் தரை இறங்கும் 15 நிமிடங்கள் தொடங்கும். 25 கிலோ மீட்டரில் இருந்து 7.4 கிலோ மீட்டருக்கு முதற்கட்டமாக லாண்டரின் உயரம் குறைக்கப்படும். அடுத்தடுத்த கட்டங்களில் லேண்டரின் உயரமும் வேகமும் லேண்டரில் உள்ள 800 நியூட்டன் என்ஜின்கள் நான்கின் உதவியுடன் படிப்படியாக குறைக்கப்படும். ஏழு கிலோ மீட்டரில் இருந்து 800 மீட்டருக்கு குறைக்கப்பட்ட பின்னர் 130 மீட்டர், பத்து மீட்டர் என அடுத்தடுத்த கட்டங்களில் ஒவ்வொரு செயல்முறைகளும் நடைபெற்று, இறுதியாக ஏழாவது கட்டத்தில் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கும்.
தரையிறங்கிய பின்னர் 45 நிமிடங்களுக்குள் லேண்டரிலிருந்து ரோவர் வெளியே வந்து அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டால் இந்தத் திட்டம் முழு வெற்றி அடையும். மேலும் அடுத்த 14 நாட்கள் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக தகவல்களை அனுப்பும். எனவே திட்டத்தின் வெற்றிக்கு அடுத்த 24 மணி நேரமும் மிகவும் முக்கியமான கட்டம் என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் சர்வதேச நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளோடு இணைந்து சந்திரயான் நகர்வுகளை கண்காணித்து கட்டளை பிறப்பித்தும், பெற்றும் வருகின்றனர்.