மோடியை கொல்ல சதி என்பது திசை திருப்பும் செயல்: காங்கிரஸ் கருத்து
பிரதமர் மோடியை கொலை செய்ய சதி என கூறுவது பிரச்னைகளை திசை திருப்பும் யுக்தியாக இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதி செய்ததாக திடுக்கிடும் தகவல் நேற்று வெளியானது. மாவோயிஸ்ட்கள் 5 பேரை மகாராஷ்ட்ர காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு வந்த கடிதம் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கடிதம் குறித்து மத்திய உளவுத்துறை ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இது பிரச்னைகளை திசை திருப்பும் யுக்தியாக இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுபற்றி பேசிய மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், மோடி மீது மக்களுக்கு அனுதாபம் வர வைப்பதற்காக இது போன்ற தகவல்கள் பரப்பப்படுவதாக கூறியுள்ளார்.
மோடியை கொல்ல முயற்சி என்ற தகவல் சரியானதுதானா என்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். மோடியை கொல்ல முயற்சி என்ற செய்தி திசை திருப்பும் யுக்தி என தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளது