அரபிக் கடலில் ‘புதிய புயல்’ ? : கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பு..!
அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் வரும் ஜூன் 3ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதியை நோக்கிச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு ஜூன் 4ஆம் தேதி வரை மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.