மணிப்பூர் | ஜனாதிபதி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் புதிய அரசு? முதல்வரை தேர்வு செய்யும் பாஜக!
மணிப்பூரில் பிப்ரவரி 12ஆம் தேதியுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில், அங்கு மீண்டும் மக்களாட்சியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கியுள்ளது. இதற்காக மணிப்பூர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம்பெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். மாநிலம் முழுவதும் உள்ள 351 நிவாரண முகாம்களில் 58,000 க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் வசிக்கின்றனர். அண்டை மாநிலங்களில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது.
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை.
இதற்கிடையே, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் பிப்ரவரி 12ஆம் தேதியுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி ஓராண்டை நிறைவு செய்ய உள்ளது.
இதையடுத்து, அங்கு மீண்டும் மக்களாட்சியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கியுள்ளது. இதற்காக மணிப்பூர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம்பெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்காக தருண் சுக் என்பவரை மத்திய பார்வையாளராக பாஜக தலைமை நியமித்துள்ளது. பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸைச் சேர்ந்த தருண் சக், முன்பு தெலங்கானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

