"நீங்கள் விதைத்ததை அறுவடை செய்வீர்கள்!"- மோடிக்கு எதிரான சர்ச்சையில் யுவராஜ் சிங் தந்தை

"நீங்கள் விதைத்ததை அறுவடை செய்வீர்கள்!"- மோடிக்கு எதிரான சர்ச்சையில் யுவராஜ் சிங் தந்தை

"நீங்கள் விதைத்ததை அறுவடை செய்வீர்கள்!"- மோடிக்கு எதிரான சர்ச்சையில் யுவராஜ் சிங் தந்தை

விவசாயிகள் போராட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்மீது சர்ச்சை எழுந்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மற்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தும் போராட்டம் 10-வது நாளாக தொடர்ந்துள்ளது. இன்று விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிகிறது. வரும் 8-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.


விவசாயிகள் போராட்டத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான யோக்ராஜ் சிங், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகளை சந்தித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையான இவர், விவசாயிகள் மத்தியில் பேசியது, இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் பஞ்சாபி சேனல் ஒன்று பேட்டி கொடுத்தார் யோக்ராஜ் சிங். அப்போது, போராட்டத்தில் சிலர் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பான கேள்வி, யோக்ராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "நீங்கள் எதை விதைத்தீர்களோ, அதையே அறுவடை செய்வீர்கள். இது உணர்வுகளின் சண்டை. இதுபோன்ற தருணங்களில் இந்த மாதிரியான கருத்துக்கள் வெளியாவதில் தவறில்லை.

இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் எந்தவொரு அறிக்கையையும் அரசாங்கம் வெளியிடக் கூடாது. பாபர், ஹவுரங்கசீப் மற்றும் பிரிட்டிஷார் போன்ற காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டதை விட மோசமான 'கொடுமைகளை' மத்திய அரசு தற்போது நடத்தி வருகிறது.

டெல்லியின் எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை எல்லைகள் திறக்கப்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை வந்தால், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், ராணுவம் மற்றும் காவல்துறையை ஒதுக்கிவைத்துவிட்டு தனியாக வருமாறு பிரதமர் மோடிக்கு நான் சவால் விடுக்கிறேன். அதன்பிறகு, விஷயங்கள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

பஞ்சாபியர்கள் டெல்லியை 18 முறை கைப்பற்றியதை மோடிக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். 19வது முறையாகவும் அதை வெல்ல முடியும். எங்களை அந்த இடத்திற்கு தள்ளவேண்டாம். உங்கள் தோட்டாக்கள் தீர்ந்துவிடும். தோட்டாக்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் பஞ்சாபியர்கள் தொடர்ந்து வருவார்கள். ஒருவேளை விவசாயிகளை நோக்கி துப்பாக்கியை வைத்து ஒருமுறை சுட்டால், அந்தத் தருணத்தில் இருந்து உங்கள் அரசின் கவுண்டன் தொடங்கும்" என்றவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் பேசினார்.

அதில், "அமித் ஷா தனது பாதுகாப்பிலிருந்து சீக்கிய பாதுகாப்பு காவலர்களை நீக்கி இருக்கிறார். இது எத்தனை நாட்களுக்கு என்று பார்ப்போம். தனது நண்பர்கள் அதானி மற்றும் அம்பானி ஆகியோரை பஞ்சாபிற்கு அமித் ஷா அழைத்து வரட்டும். பின்னர் அவர்கள் எப்படி திரும்பிச் செல்வார்கள் என்று பார்ப்போம்" என்றார்.

முன்னதாக விவசாயிகள் மத்தியில் பேசியபோதும், "நீங்கள் பஞ்சாபைக் காப்பாற்ற விரும்பினால், உங்கள் கைகளில் ஒருவிதமான பவர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கையில் பவர் இருந்தால், பஞ்சாப் தேசத்திலிருந்து ஒரு புதிய சூரியன் உதயமாகும்" எனக் கூறினார் யோக்ராஜ் சிங். இதே உரையில் பிரதமர் மோடி மற்றும் குஜராத் குறித்து பேசியவர், இந்து பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து யோக்ராஜ் சிங்கை கண்டித்து நேற்று இரவில் இருந்து #ArrestYograjSingh என்ற ஹேஷ்டேக்கை அவருக்கு எதிராக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com