‘1 ரூபாய் கூட இந்தியர்களின் பணம் செல்லக்கூடாது..’ PAK-க்கு உதவிய துருக்கிக்கு வந்த சிக்கல்?
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதலை நடத்திய நிலையில், அதற்கு துருக்கி ஆயுதங்களை தந்து உதவியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பாய்காட் துருக்கி என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பதிவுகள் சமூக தளங்களில் பரவி வருகின்றன. சில பயணச் சேவை நிறுவனங்கள் துருக்கிக்கான சேவையை நிறுத்தின. பலர் துருக்கிக்கு சுற்றுலாவுக்கு செல்லும் திட்டத்தையும் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே துருக்கிக்கு ஒரு ரூபாய் கூட இந்தியர்களின் பணம் செல்லக்கூடாது என்று நெட்டிசன்கள் சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். துருக்கிக்கு நிலநடுக்கம் போன்ற இக்கட்டான காலகட்டங்களில் இந்தியா உதவியது என்றும், ஆனால் அதற்கான நன்றியை அந்நாடு நமக்கு காட்டவில்லை என்றும் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
வர்த்தகங்களை நிறுத்த கோரிக்கை..
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் துருக்கி நாட்டில் தயாரான பொருட்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துள்ளன. துருக்கியிலிருந்து இறக்குமதியான ஆப்பிள்களை விற்பனை செய்யாமல், புனேவில் உள்ள கடைக்காரர்கள் நிறுத்திக்கொண்டுள்ளனர். துருக்கியிலிருந்து ஆப்பிள் இறக்குமதி செய்ய முழுமையான தடை விதிக்கவேண்டும் என இமாசல பிரதேச காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
துருக்கிக்கு மார்பிள் கற்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்த ராஜஸ்தான் மாநில வணிகர்கள் முடிவெடுத்துள்ளனர். மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளை செலிபினாஸ் (CELEBINAS) என்ற துருக்கி நிறுவனம் கவனித்து வரும் நிலையில், அதனுடனான தொடர்புகளை 10 நாட்களுக்குள் கைவிடவேண்டும் என விமான நிலைய நிர்வாகத்திற்கு உத்தவ் சிவசேனா எச்சரித்துள்ளது.