\
Nestle India rejects Maggi infestation claims
maggix page

மேகி பாக்கெட்டில் புழுக்கள்? அதிர்ச்சியடைந்த மக்கள்.. நோட்டீஸுக்கு நெஸ்லே விளக்கம்!

உலகம் முழுவதும் புகழ்பெற்ற நெஸ்லே (Nestle) நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மேகி, தற்போது சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது.
Published on

‘மேகி பாக்கெட்டில் புழுக்கள்’ என ஒரு எக்ஸ் தளம் கொளுத்திப் போட்டதன் விளைவு, அது இணையத்தில் வைரலான நிலையில், மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்ட உணவுப் பாதுகாப்பு அமைப்புக்கு அந்த நிறுவனம் அளித்த பதில் என்ன?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவாக இருக்கிறது, மேகி (Maggi). காரணம், எளிமையாகவும் விரைவாகவும் சமைக்கக்கூடிய சிற்றுண்டியாக இது இருப்பதால், அனைவராலும் பெரிதும் விரும்பப்படுகிறது. உலகம் முழுவதும் புகழ்பெற்ற நெஸ்லே (Nestle) நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மேகி, தற்போது சர்ச்சையை எதிர்கொண்டுள்ளது. ஆம், மேகி நூடுல்ஸில் புழுக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு, அதுகுறித்த பதிவுகள் வைரலாகின. ஜூன் 12 அன்று வெளியான ஒரு ஊடக அறிக்கை தொடர்பாக, உணவுப் பாதுகாப்பு அமைப்பு (FSSAI), நெஸ்லே நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுகுறித்த புகார்களை முற்றிலும் மறுத்துள்ள நெஸ்லே நிறுவனம், அதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

”மேகி நூடுல்ஸில் பூச்சித் தொல்லை இருப்பதாகக் கூறப்படும், சரிபார்க்கப்படாத தகவலின் அடிப்படையில் ஊடகங்களில் பரவிவரும் குற்றச்சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். குறிப்பிட்ட நூடுல்ஸ் மாதிரிகள் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு, அவை முற்றிலும் தரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று நெஸ்லே நிறுவனம் கூறியுள்ளது. மேலும், தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அந்நிறுவனம், தனது உற்பத்திச் செயல்பாடுகள் முழுவதும் கடுமையான தரநிலைகளைப் பின்பற்றுவதாகவும், ஒழுங்குமுறை அதிகாரிகளிடம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளது. தவிர, இந்த விவகாரம் தொடர்பான தனது பதிலின் ஒரு பகுதியாக, தொடர்புடைய அனைத்துப் பதிவுகளையும் சோதனை முடிவுகளையும் உணவு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தவறான புகாரை அளித்த சமூக ஊடகக் கணக்கு போலியானது என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

Nestle India rejects Maggi infestation claims
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மேகி நூடுல்ஸ்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com