ஒடிசா | கல்லூரி விடுதியில் நேபாள மாணவி சடலமாக மீட்பு.. போராடிய மாணவர்களை தாக்கிய ஊழியர்கள்!
ஒடிசாவில் உள்ள கே.ஐ.ஐ.டி கல்லூரியில் நேபாள மாணவியின் தற்கொலைக்கு நீதிகேட்டு போராடிய மாணவர்களை தாக்கிய வழக்கில், 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புவனேஷ்வரில் உள்ள காளிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்துவந்த நேபாளத்தை சேர்ந்த மாணவியை, அதே கல்லூரியில் படிக்கும் ஆத்விக் ஸ்ரீவஸ்தவா என்ற மாணவர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதோடு மிரட்டிவந்ததால் மனவுளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கல்லூரியில் பயிலும் நேபாள மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர், மாணவிக்கு நீதிகேட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாவலர்களை வைத்து கல்லூரி நிர்வாகத்தினர் அடித்து துரத்தியதாக கூறப்படுகிறது.
இதில் மாணவர்கள் பலர் காயமடைந்த நிலையில், கல்லூரி இயக்குநர்கள் மூன்று பேர் உட்பட 5 பேரை கைது செய்து, காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே, மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு கல்லூரி நிர்வாகத்தினர் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நேபாள மாணவி மரணத்திற்கு நீதிகிடைக்காவிட்டால், ஒடிசாவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இனி அனுமதி வழங்கப்படாது என நேபாள அரசு தெரிவித்துள்ளது. ஒடிசாவில் உள்ள கே.ஐ.ஐ.டி கல்லூரியில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கல்லூரியில் படித்துவந்த நேபாள மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை தூதரக ரீதியாக எதிர்கொண்டு வருவதாக தெரிவித்த நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவித்தார். அதோடு, ஒடிசாவில் பாதிக்கப்பட்ட நேபாள மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, தூதரக அதிகாரிகள் 2 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.