கேரள மக்களுக்கு குவியும் அண்டை மாநில நிதியுதவி!

கேரள மக்களுக்கு குவியும் அண்டை மாநில நிதியுதவி!
கேரள மக்களுக்கு குவியும் அண்டை மாநில நிதியுதவி!

கனமழையால் கடந்த நூறு ஆண்டுகளில் சந்திக்காத பாதிப்புகளை சந்தித்து வரும் கேரளா மாநிலத்திற்கு பல அண்டை மாநிலங்களும் உதவ முன் வந்துள்ளன. 

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு 25 கோடி ரூபாயை உதவியாக வழங்க உள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். உடனடியாக நிதியை கேரளாவிற்கு அனுப்புமாறு தெலங்கானா தலைமைச் செயலாளர் எஸ்.கே ஜோஷியை அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகளையும் கேரளாவிற்கு வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள சந்திரசேகர் ராவ், மீட்புப் பணிகளில் உதவுமாறு தெலங்கானா மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, பஞ்சாப் அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இதேபோல், மழை வெள்ளத்தால் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கும் கேரள மக்களுக்கு 5 கோடி ரூபாய்க்கு நிவாரண பொருள்களை பஞ்சாப் அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிஸ்கட், ரஸ்க், குடிநீர், பால் பவுடர் உள்ளிட்ட உணவு பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவை பஞ்சாப் மாநில அரசு சார்பில் விமானம் மூலம் அனுப்பப்படவுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ அனைத்து மாநில மக்களும் முன் வரவேண்டும் எனவும் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழகத்தில் இருந்து ரயில் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டது. ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 7 டேங்கர்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் குடிநீருடன் ரயில் புறப்பட்டு சென்றது. திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக திருவனந்தபுரம் செல்லும் குடிநீர் கேரள மக்களுக்கு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தென்னக ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் பாட்டில்களில் குடிநீர் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல், ஆந்திர, டெல்லி மாநில அரசுகளும் கேரளாவிற்கு தலா 10 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com