\
Neha Bora Video Row BJP and Allies Criticise AISA Leaders Remarks
Neha BoraPTI

வீடியோவால் புதிய சர்ச்சை.. நேஹா போராவை குறிவைக்கும் பாஜக.. நடந்தது என்ன?

நேஹா போராவின் பழைய வீடியோவுக்கு பாஜகவும், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் சில தலைவர்களும் கண்டனம்!
Published on: 

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

AISA மாணவர் அமைப்பின் தலைவர் நேஹா போராவின் பழைய வீடியோ ஒன்று நவம்பர் 3 அன்று இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பாஜக அவரை கடுமையாக விமர்சித்து வருகிறது. "கோயில்களுக்குள் அர்ச்சகர்கள் பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்" என அவர் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளே இந்த சர்ச்சைக்குக் காரணம்.

பாஜக தேசியச் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி பகிர்ந்த வீடியோவில், பிராமணிய அமைப்பு குறித்துப் பேசிய நேஹா, "இதே அமைப்பில்தான் பிராமணப் பெண்களும் பாதுகாப்பின்றி வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். கோயில்களுக்குள் அர்ச்சகர்கள் வன்கொடுமை செய்கிறார்கள். உன்னாவ், கத்துவா சம்பவங்களில் இதைப் பார்த்தோம்" என்று கூறியுள்ளார்.

இதை X தளத்தில் பகிர்ந்த பண்டாரி, நேஹாவை "ராகுல் காந்தியின் போஸ்டர் கேர்ள்" என்று குறிப்பிட்டு, "இந்து வெறுப்பை வெளிப்படுத்துகிறார்" என்று குற்றம்சாட்டினார். "காங்கிரஸ் இந்துக்களை வெறுக்கிறது" என்றும், ராகுல் காந்தி முன்பு கோயில்களில் பெண்களுக்குத் தொல்லை நடக்கிறது என்று கூறியதிலிருந்தே நேஹா உத்வேகம் பெற்றதாகவும் அவர் கூறினார். கௌரவ் பாட்டியா உள்ளிட்ட பாஜகவினரும் நேஹாவையும் காங்கிரஸையும் விமர்சித்துள்ளனர்.

இதற்கு, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளிலிருந்தும் எதிர்ப்பு வந்துள்ளது. சிவசேனா (UBT) தலைவரும் முன்னாள் எம்.பி.-யுமான பிரியங்கா சதுர்வேதி, "இது பழைய வீடியோவாக இருக்கலாம் என்று நம்புகிறேன். ஆனால் இது தீவிரச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ஒரு பிராமணப் பெண்ணாக நானே கேட்க வேண்டியுள்ளது: இத்தகைய இழிவான மொழியைப் பயன்படுத்துவது சரியா?" என்று ANI-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். நேஹாவுடன் அமர்ந்து பேச விரும்புவதாகவும், அவர் தன் அறிவை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சமாஜ்வாதி எம்.பி. ராஜீவ் ராய், "ஒவ்வொரு மதத்திலும் நல்லவர்களும் தீயவர்களும் உண்டு. இப்படிப் பொதுமைப்படுத்தக் கூடாது. இதுதான் பாஜக விரும்புவது; ஏன் அந்தப் பொறியில் விழ வேண்டும்?" என்றார்.

2018 கத்துவா வழக்கில், எட்டு வயதுச் சிறுமி ஒரு கிராமக் கோயிலில் சிறைவைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். 2019 ஜூனில் ஆறு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். குற்றச்செயல்களை ஒட்டுமொத்த மதப் பணியாளர்கள், வழிபாட்டுத் தலங்கள் மீது நேஹா பொதுமைப்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது

Neha Bora
Neha BoraPTI

இதற்கிடையே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் நேஹா மீது FIR பதிவு செய்யக் கோரி டெல்லி காவல்துறையை அணுகியுள்ளார்.

நீட்-யுஜி தொடர்பான ஜந்தர் மந்தர் போராட்டம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் ஆகியவற்றில் நேஹா முக்கிய முகமாக இருந்தார். அக்டோபர் 12 உச்சநீதிமன்றப் பேரணியில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியுடன் அவர் கலந்துகொண்டார்.

குற்றச் சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசுவதற்கும், அதை ஒரு சமூகத்தின் மீதோ பணியாளர்கள் மீதோ பொதுமைப்படுத்துவதற்கும் இடையிலான எல்லை எது என்ற விவாதம் இதன்மூலம் எழுந்துள்ளது. அதே நேரத்தில், ஒரு பழைய வீடியோ அரசியல் மோதலின் மையமாக மாறியிருப்பது குறித்தும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.