\
National Testing Agency Scraps May 3 NEET Examination
நீட் தேர்வு ரத்துPt web

NEET மறுதேர்விலும் மோசடி.. பயோமெட்ரிக் முறையில் நடந்த சர்ச்சை.. மாணவர்கள் உட்பட 30 பேர் கைது!

நாடு முழுவதும் கடும் பாதுகாப்புடன் நடந்த நீட் மறுதேர்வின் போது பீகார் லக்கிசராயில் ஆள்மாறாட்ட மோசடி கும்பல் கைது. மருத்துவ மாணவர்கள், பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உட்பட 30 பேர் சிக்கினர்.
Published on

நாடு முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்புடன் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்ற ஒரு பெரும் மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மருத்துவ மாணவர்கள் மற்றும் தேர்வு செயல்முறைகளில் ஈடுபட்ட பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உட்பட மொத்தம் 30 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்துள்ளனர். லக்கிசராய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேர்ணா விடுத்துள்ள அறிக்கையின்படி, அப்பகுதியில் உள்ள மூன்று பள்ளி தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

நீட் தேர்வு மையம்
நீட் தேர்வு மையம் கோப்பு படம்

கைது செய்யப்பட்டுள்ள 30 பேரின் விவரங்களும் வந்துள்ளது. அந்த வகையில் உண்மையான மாணவர்களுக்குப் பதிலாக தேர்வு எழுத வந்தவ 9 பேர், பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள்: 18 பேர், உண்மையான தேர்வு மாணவர் : 1 நபர், உதவியாளர்கள் : 2 பேர் என மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏராளமான மொபைல் போன்கள் மற்றும் போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, இந்த மோசடி நெட்வொர்க்கின் பின்னணியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மாஸ்டர்மைண்ட்களாகச் செயல்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள கயாவில் உள்ள ஏஎன்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவரான அர்பித் ராஜ், ஏற்கனவே 2024 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ அமைப்பால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள்தான் மருத்துவக் கல்லூரி மாணவர்களைப் பணம் கொடுத்து 'சால்வர்ஸ்' ஆகவும், ஆள்மாறாட்டம் செய்பவர்களாகவும் பயன்படுத்தியுள்ளனர். ஹாஜிப்பூரைச் சேர்ந்த 4-ஆம் ஆண்டு மருத்துவ மாணவரான மயங்க் காஷ்யப் என்பவர், ஹசன்பூர் தேர்வு மையத்தில் உள்ள பயோமெட்ரிக் நிறுவன ஊழியர் அங்கித் குமார் என்பவனுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.

நீட் தேர்வர்கள்
நீட் தேர்வர்கள்X

பயோமெட்ரிக் ஊழியரின் உதவியோடு, மயங்க் காஷ்யப் தானும் அந்த நிறுவனத்தின் ஊழியர் போலப் போலி அடையாளத்துடன் தேர்வு மையத்திற்குள் நுழைந்துள்ளார். பின்னர், பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையைத் தங்களுக்குச் சாதகமாக முறியடித்து, உண்மையான மாணவர்களுக்குப் பதிலாகப் போலி நபர்களைத் தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். இது குறித்து துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவம் குமார் கூறுகையில்: "ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற வைப்பதற்காக ஒவ்வொரு வேட்பாளரிடமும் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை பேரம் பேசப்பட்டுள்ளது. இதில் முன்பணமாக ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை வாங்கப்பட்டுள்ளது.

மீதித் தொகையைத் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பிறகு தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார். தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வங்கி கணக்குகள், மொபைல் அழைப்பு விவரங்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மே 12 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு வினாத்தாள் கசிவு புகாரால் ரத்து செய்யப்பட்டு, நேற்று 5,454 மையங்களில் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மறுதேர்வு எழுதிய நிலையில், மீண்டும் பீகாரில் இத்தகைய மோசடி கும்பல் பிடிபட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

National Testing Agency Scraps May 3 NEET Examination
ரூ.40 கோடி லஞ்ச சர்ச்சை : மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக திரிணமூல் எம்பி-க்கள்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com