நீட் மறுதேர்வு: தனிமைப்படுத்தப்படும் வினாத்தாள் தயாரிப்பாளர்கள்!
தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்ட நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முறைகேடுகள் உறுதியானதால் மே 3 அன்று நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 அன்று மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ (CBI) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
நீட் மறு தேர்வு, வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், மிகக்கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக நீட் வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் அதை மொழிபெயர்த்தவர்கள் ரகசியமான இடத்தில் வரும் 21ஆம் தேதிவரை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்சுகள், கணினி, இணையதள இணைப்பு போன்ற நவீன வசதிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. வெகுசிலர் மட்டுமே அந்த அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அறைக்குள் செல்பவர்கள் வெளியே வருபவர்கள் விவரமும் முழுமையாக பதிவு செய்யப்பட உள்ளது.
இது ஒருகட்ட பாதுகாப்பு மட்டுமே என்றும் வினாத்தாள் அச்சிடுதல், அதைக் கொண்டுசெல்லுதல், தேர்வு மையங்களில் பாதுகாத்து வைத்தல் வரை மேலும் பலகட்ட பாதுகாப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறினர்.

