\
AI
AIANI

NEET தேர்வு முறைகேடு எதிரொலி.. இனி மனிதர்கள் இல்லை? ‘AI’ மூலம் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்!

நாட்டின் முக்கியமான நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு பணிகளிலும் AI முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.
Published on

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

கல்வி கற்பிப்பது முதல் மருத்துவம் வரை, அனைத்துத் துறைகளிலும் ‘AI’ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாட்டின் முக்கியமான நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிப்பு மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளிலும் AI முக்கியப் பங்கு வகிக்க உள்ளது. NEET போன்ற நாடு முழுவதும் நடைபெறும் முக்கியமான நுழைவுத்தேர்வுகளில் வினாத்தாள் பாதுகாப்பு மற்றும் தேர்வு நடைமுறைகள் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், தேசிய தேர்வு முகமை எனப்படும் NTA தற்போது தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வினாத்தாள்களை மொழிபெயர்க்கும் நடைமுறையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

NEET EXAM
NEET EXAMANI

மருத்துவப் படிப்புகளுக்கான முக்கிய நுழைவுத்தேர்வான NEET, தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. 2026-ஆம் ஆண்டுக்கான NEET தேர்விலும் 13 மொழிகளில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பிராந்திய மொழியைத் தேர்வுசெய்யும் நிலையில், அந்த மொழியிலும் ஆங்கிலத்திலும் வினாத்தாள் வழங்கப்படுகிறது. மொழிபெயர்ப்பில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், ஆங்கிலப் பதிப்பே இறுதியானதாகக் கருதப்படும் என NTA தனது விதிமுறைகளில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆங்கிலத்தில் இருந்து பிற மொழிகளுக்கு வினாத்தாள்களை மொழிபெயர்க்கும் பணியில் AI தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த NTA திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் மொழிபெயர்ப்பு பணியை வேகமாக மேற்கொள்வதுடன், மொழிபெயர்ப்பில் ஒரே மாதிரியான தரத்தை பராமரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதன் காரணமாக இனிமேல் வினாத்தாள்களை மனிதர்களே மொழிபெயர்க்க மாட்டார்கள் என்று கூற முடியாது. AI மூலம் மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்பில் ஏற்படக்கூடிய மொழி, இலக்கணம் மற்றும் பாடம் சார்ந்த பிழைகளை கண்டறிந்து சரிபார்ப்பதற்கு மனித நிபுணர்களின் பங்களிப்பும் தொடர்ந்து இருக்கும் வகையில் நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்காகவே NTA தற்போது Subject Matter Experts எனப்படும் பாடப்பிரிவு நிபுணர்களை புதிதாக empanel செய்து வருகிறது. வினாத்தாள் தயாரிப்பது மட்டுமின்றி, கேள்விகளை மதிப்பாய்வு செய்தல், மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பை சரிபார்த்தல் மற்றும் moderation உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் இந்த நிபுணர்கள் ஈடுபட உள்ளதாக NTA தெரிவித்துள்ளது.

NTA
NTAANI

இதுமட்டுமின்றி, வினாத்தாள் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும் NTA பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. முக்கியமான ரகசிய பணிகளுக்காக பாதுகாப்பான கணினி அமைப்புகள், தனிமைப்படுத்தப்பட்ட பணியிடங்கள் மற்றும் பணியாளர்களுக்கான பல்வேறு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் போன்ற நடைமுறைகளும் கொண்டு வரப்பட்டு வருகின்றன. மேலும், வினாத்தாளில் தகவல் சார்ந்த பிழைகள், மொழிப் பிழைகள், மொழிபெயர்ப்பு மற்றும் வடிவமைப்பு தொடர்பான தவறுகளை கண்டறிந்து சரிசெய்வதற்காக பல அடுக்கு சரிபார்ப்பு முறைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்மூலம் வினாத்தாள் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கவும், மொழிபெயர்ப்பில் ஏற்படக்கூடிய தவறுகளை குறைக்கவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடைமுறையை உருவாக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com