ஜல்லிக்கட்டிற்காக அவசரச் சட்டம் தேவை.. மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் பொங்கலின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வரக் கோரி மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்தாண்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கக்கோரி மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் அனில் மாதவிடம் அதிமுக எம்.பி.க்கள் இன்று நேரில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என அமைச்சரிடம் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். அவசரச் சட்டம் கொண்டு வந்தால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என குறிப்பிட்ட அதிமுக எம்.பி தம்பிதுரை, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதன் மூலம் தமிழக மக்களின் கலாசாரம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
அப்போது, பேசிய மத்திய அமைச்சர் அனில் மாதவ், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்காக மத்திய அரசு காத்திருப்பதாக தெரிவித்தார். தமிழக மக்களின் கலாசாரத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என குறிப்பிட்ட அவர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரதமர் மோடியிடம் இன்று ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.