டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு !
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்துக்கு பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு பாஜக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக பாரதிய ஜனதாவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாவற்றிலுமே பாரதிய ஜனதா கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. எனினும் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும் என சில கணிப்புகளே கூறியுள்ளன. பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியம் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா சந்திக்க இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.