பிஹார் தேர்தலில் இரட்டை சதம்.. 202 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும் NDA கூட்டணி!
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து பெரும்பான்மை பெற்றது. மகாகத்பந்தன் கூட்டணி 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளை மீறி ஆட்சியை மாற்றாமல் வைத்துள்ளது.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11-ஆம் தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெற்றது.. முதற்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலையில், நவம்பர் 14-ம் தேதியான நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது..
பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், யார் வகுத்த வியூகம் ஓட்டாக மாறப்போகிறது? ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது.. ஆனால் அத்தனை கணிப்புகளையும் மீறி பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது..
202 இடங்களில் பிரமாண்ட வெற்றி..
2025 பிஹார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் தலா 101 இடங்களில் போட்டியிட்டன. மகாகத்பந்தன் கூட்டணியில் இரண்டு பெரிய கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம் 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் போட்டியிட்டன..
இந்தசூழலில் வாக்கு எண்ணிக்கைகளின் முடிவில் 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களிலும், மகாகத்பந்தன் கூட்டணி 31 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன..
கட்சிகள் அடிப்படையில்,
பாஜக - 89 இடங்களில் வெற்றி
ஐக்கிய ஜனதா தளம் - 85 இடங்களில் வெற்றி
ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 25 இடங்களில் வெற்றி
லோக் ஜன சக்தி கட்சி - 19 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் கட்சி - 6 இடங்களில் வெற்றி
மதசார்பற்ற ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா - 5 இடங்களில் வெற்றி
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) - 5 இடங்களில் வெற்றி
ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா - 4 இடங்களில் வெற்றி
சிபிஐ மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் விடுதலை கட்சி - 2 இடங்களில் வெற்றி
சிபிஎம் - 1 இடம் வெற்றி
ஐஐபி - 1 இடத்தில் வெற்றி
பிஎஸ்பி - 1 இடத்தில் வெற்றி என மக்கள் வாக்களித்துள்ளனர்..

