பெங்களூருவில் 26 எதிர்க்கட்சிகள் நாடளுமன்றத் தேர்தல் வியூகம் அமைத்த அதே நேரத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக, சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு உட்பட 39 கூட்டணிக் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியை பூங்கொத்துக் கொடுத்து அவர் வரவேற்றதுடன், கூட்டத்தில் பிரதமருக்கு அருகிலேயே அவருக்கு இருக்கை அளிக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை பிரதமர் மோடி தலைமையில் ஒற்றுமையாக எதிர்கொள்வது என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்மொழிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அசாம் கன பரிஷத் கட்சியின் அதுல் போராஜியும் வழிமொழிந்தனர்.
அந்த தீர்மானத்தில், ‘உலகின் மிகப் பிரபலமான தலைவர் என்கிற முறையில் பிரதமர் நரேந்திர மோடி கோடிக்கணக்கான இந்தியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றிருக்கிறார். எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் இருக்கின்றன. 2014-ம் ஆண்டை விட 2019-ம் ஆண்டில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததைப் போல் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் வெற்றிபெறுவோம். மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளால் நாட்டில் ஏழ்மை பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “எதிர்க்கட்சிகளின் கப்பல் கரை சேராது” என்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் “நாம் ஒன்றாக இருக்கிறோம், ஒருங்கிணைந்து இருக்கிறோம், ஒத்த கருத்தை உடையவர்களாக இருக்கிறோம்” என்ற முழக்கம் முன்னெடுக்கப்பட்டது.