என்ன இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடா ? வலுக்கும் எதிர்ப்பு
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் அளித்ததற்கு தேசிய பெண்கள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஓரு ஆய்வு மேற்கொண்டது. ஐநாவில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் 550 வல்லுநர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பு, பாரம்பரிய நடைமுறைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் பல்வேறு நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்த ஆய்வில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் நடத்தப்படும் விதம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா இதனை முற்றிலும் மறுத்துள்ளார், ஆய்வு சிறிய அளவில் நடத்தப்பட்டு இருக்கும். நாட்டில் உள்ள ஓட்டுமொத்த மக்களின் பிரதிபலிப்பாக இந்த ஆய்வு அறிக்கை இருக்காது. பாலியல் குற்றங்கள், பெண் சிசுக்கொலை போன்ற விவகாரத்தில் இந்தியாவில் உள்ள பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிக்க வாய்ப்பே இல்லை. இந்தியாவுக்கு அடுத்த இடங்களில் உள்ள நாடுகளில் பெண்கள் பொதுவெளியில் பேசுவதற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை என்றார்.