மகாராஷ்டிரா |மாறும் அரசியல் களம்.. ஷரத்துடன் இணையும் NCP.. துணை முதல்வராகும் அஜித் பவார் மனைவி!
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக இருந்த அஜித் பவார் நேற்று விமான விபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பூசல் வெடித்துள்ளது. மூத்த தலைவர்கள் சுனேத்ரா பவாரை அடுத்த தலைவராக நியமிக்க வேண்டும் என்று வாதிடுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் நேற்று (ஜன.28) காலை விமான விபத்தில் உயிரிழந்தார். அஜித் பவாரின் எதிர்பாராத மரணம், மகாயுதி அரசாங்கத்தின் மீதும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தேசியவாத காங்கிரஸ் முகாமில் தலைமை மற்றும் வாரிசுரிமை குறித்த கேள்விகளையும் எழுப்பியது. இந்த நிலையில், அஜித் பவாரின் மறைவுக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பூசல் வெடித்துள்ளது. மூத்த தலைவர்கள் சுனேத்ரா பவாரை அடுத்த தலைவராக நியமிக்க வேண்டும் என்று வாதிடுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைந்த துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவியே சுனேத்ரா பவார் ஆவார். அவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
இந்த நிலையில், மூத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான பிரபுல் படேல், சாகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே மற்றும் சுனில் தட்கரே ஆகியோர் சுனேத்ரா பவாருடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி, அஜித் பவாரால் காலியாக உள்ள தொகுதியில் சுனேத்ரா பவாரே போட்டியிட்டு, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சுனேத்ரா பவாரையே அடுத்த தலைவராக நியமிக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வாதிடுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிராவின் உணவு மற்றும் மருந்துத்துறை அமைச்சருமான நர்ஹரி ஷிர்வால், சுனேத்ரா பவாரை மாநில அமைச்சகத்தில் சேர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் ஆலோசனை நடத்தயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதில் கட்சியின் செயல் தலைவரான பிரபுல் படேல் தலைமை தாங்கக்கூடும் என்றும் அதேநேரத்தில், தேசியவாத காங்கிரஸ் (ஷரத் பவார்) உடன் இணைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநகராட்சித் தேர்தல்களுக்குப் பிறகு, அஜித் பவார், ஷரத் பவாருடன் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த நர்ஹரி ஷிர்வால், "இரண்டு பிரிவுகளும் ஏற்கெனவே ஒன்றாக உள்ளன. சிதறிக் கிடப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்" என்றார்.

