சரத்பவார், உத்தவ் தாக்கரே இன்று மதியம் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு
சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்ரே ஆகிய இருவரும் இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சரானார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே பாஜகவோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது என்பது அஜித்பவாரின் சொந்த முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல; பாஜக - அஜித்பவார் கூட்டணியை தேசியவாத காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். யாருமே எதிர்பாராத நேரத்தில் மகாராஷ்டிராவில் நடந்துள்ள இந்தத் திடீர் திரும்பம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த அதிரடி அரசியல் மாற்றம் குறித்து விளக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரேவும் இன்று மதியம் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தச் சந்திப்பில் என்ன நடந்தது? அடுத்தக்கட்ட முடிவு என்னவாக இருக்கும்? என்பது குறித்த கேள்விகளுக்கு அவர்கள் விளக்கம் அளிப்பார்கள் எனத் தெரிகிறது.
இதனிடையே மகாராஷ்டிரா அரசியலில்‘குதிரை பேரம்’ நடக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆகவே எதிர்க்கட்சிகள் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

