தனித்துவமான கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்த நவாசுதீன் சித்திக் அண்மைக்காலமாக லைம் லைட்டிலேயே இருந்து வருகிறார். ஏனெனில் அவரது மனைவி ஸைனப் என்கிற ஆலியா சித்திக் மீது நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெஹ்ரூனிஷா போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
அதில், “வீட்டில் இருக்கும் ஸைனப் என்னுடன் அத்துமீறி பேசுவது, காயப்படுத்துவது, தாக்கி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள்” என கூறியிருக்கிறார். இதனையடுத்து ஸைனப் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மட்டும் நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் நவாசுதீன், அவரது மனைவி ஸைனப் மற்றும் தாயார் மெஹ்ரூனிஷா இடையேயான சொத்து தகராறில் இப்படி நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே மாமியாரின் புகார் முற்றிலும் உண்மையானதல்ல என ஸைனப் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், ஸைனப் சித்திக்கின் வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் ட்விட்டரில் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அதில், “குடும்ப வன்முறை குறித்து புகார் தெரிவித்து வழக்கு தொடர் ஸைனபை வெளியே விடாமல் நவாசுதீனின் ஆட்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த போலீசும் ஸைனபை காப்பாற்ற முன்வரவில்லை. ஆனால் நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபோக, ஸைனபுக்கு கடந்த 7 நாட்களாக சாப்பாடு போடாமல், பாத்ரூம் போகக் கூட அனுமதிக்காமல், குளிக்க கூட விடாமல் கொடுமைப் படுத்துகிறார்கள். ஆனால் அவர் மீது நவாசுதீன் சித்திக்கும் அவரது தாயாரும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு குற்றவழக்குகளை தொடுத்திருக்கிறார்கள். நவாசுதீன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எதிராக ஸைனப்பிடம் கையெழுத்து வாங்கக் கூட அவர்களது பாதுகாவலர்கள் தடுக்கிறார்கள்.” என வழக்கறிஞர் ரிஸ்வான் கூறியிருக்கிறார்.