பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்
Published on

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான பஞ்சாப், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. ஆட்சியைப் பிடிக்க சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயற்சித்துவரும் சூழலில், ஆளும் காங்கிரஸ் கட்சியிலோ வழக்கம்போல கோஷ்டி மோதல்.

2017ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கிற்கும் இடையேயான மோதல் போக்குதான் பஞ்சாப் அரசியலில் அண்மைக்கால பேசுபொருள்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவி கிடைக்காவிட்டால், ஆம் ஆத்மி கட்சியில் சித்து சேர்ந்துவிடுவார் எனவும் தகவல் வெளியானது. எனினும் சித்துவுக்கு மாநில தலைவர் பதவி வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துவந்தார் முதலமைச்சர் அமரிந்தர் சிங். ஆனால் இதனை புறந்தள்ளும் வகையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்திருக்கிறார் சோனியா காந்தி.

மேலிடத்தின் முடிவை ஏற்பதாக அமரிந்தர் சிங் கூறியதால் தற்காலிகமாக பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக கருதுகின்றனர் கட்சியினர். ஆனால் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் சித்துவை சந்திக்க மாட்டேன் என சோனியா காந்தியிடம் அமரிந்தர் சிங் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com