ஆப்கான் அரசியல் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - இந்தியா

ஆப்கான் அரசியல் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - இந்தியா

ஆப்கான் அரசியல் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - இந்தியா
Published on
ஆப்கானிஸ்தான் விவாகரம் தொடர்பாக இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட மத்திய ஆசியாவை சேர்ந்த 8 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு தங்கள் இடைக்கால ஆட்சியை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை தலிபான்களின் அரசை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று டெல்லியில் வைத்து ஆலோசனை மேற்கொண்டனர். ரஷ்யா ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஆப்கான் நிலவும் அரசியல் சூழல், அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ''ஒரு முக்கியமான தருணத்தில் இந்த கூட்டத்தை இந்தியா நடத்துகிறது. ஆப்கானிஸ்தானின் அரசியல் சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கு ஏற்படும் தாக்கங்களை உள்ளடக்கியது. ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கும் அவர்களுக்கு என்ன மாதிரியான உதவிகளை மத்திய ஆசிய நாடுகள் செய்ய முடியும் என்பது குறித்து ஆலோசிப்பதற்கான முக்கிய தருணம் இது'' என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய, தஜிகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ''ஆப்கானிஸ்தானுடன் அதிக எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொள்ளும் நாடு எங்களுடையது தான். ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால், எல்லைப்பகுதிகளில் அதிகப்படியான போதைப்பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதேவேளையில் அண்டை நாடு என்ற முறையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு உரிய உதவிகளை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.
கஜகஸ்தான் தேசிய பாதுகாப்பு அதிகாரி கரிம் மாசிமோவ் கூறுகையில், ''ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து கவலை கொள்ளும் நாங்கள் அந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது என்பதை உணர்கிறோம். அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்'' என்றார்.
'ஆப்கான் பயங்கரவாத அமைப்பு தொடர்பாக தொடர்பாக கிர்கிஸ்தான் மட்டுமல்ல உலகம் முழுவதும் அச்சமான சூழல் நிலவுகிறது. அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சியுடன் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும்' என கிர்கிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மராட் எம் இமான்குலோவ் கூறினார்.
உஸ்பெகிஸ்தானின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் விக்டர் மக்ம்டோவ் பேசுகையில், ''ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல மத்திய ஆசிய நாடுகளில் அமைதியை மீட்டெடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து ஒரு கூட்டு தீர்வை முன்னெடுக்க வேண்டும். தனி ஒரு நாடால் செய்ய முடியாததை மத்திய ஆசிய நாடுகளின் கூட்டு முயற்சி செய்யும்'' என்றார்.
மத்திய ஆசிய நாடுகளில் உள்ள பாகிஸ்தான், சீனா நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள், இந்தியா நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com