“சிபிஐ, ஆர்பிஐயை காப்பாற்றவே ஒன்றிணைந்துள்ளோம்” - ராகுல்
சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை பாஜகவிடம் இருந்து காப்பாற்றவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராகுல், பாஜகவின் அழுத்தம் காரணமாகவே ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ராஜினாமா செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். அரசியலமைப்பில் சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை பாஜகவிடம் இருந்து காப்பாற்றவே தாங்கள் ஒன்றிணைந்துள்ளதாக கூறினார்.
மேலும் பாஜகவின் ரஃபேல் ஊழல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராட உள்ளதாகவும், மத்திய பாஜக அரசின் இந்தப்போக்கை தடுத்த நிறுத்த செயல்பட உள்ளதாகவும் கூறினார். எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் இதற்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்து உள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நாளை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. உர்ஜித் படேல் ராஜினாமா தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது முறையிட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.