உத்தரபிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
கோரக்பூரில் குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் கடந்த 6 நாட்களில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 63 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மேலும் 9 குழந்தைகள் உயிர் இழந்தன. இதனால் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.
குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததுதான் காரணம், இது படுகொலை சம்பவம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனை மறுத்த யோகி ஆதித்யநாதின் அரசு, குழந்தைகளின் மூளையில் ஏற்பட்ட சில பாதிப்பு காரணமாகத்தான் 72 குழந்தைகள் பலியானார்கள் என்று தெரிவித்திருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக முதல் கட்ட நடவடிக்கையாக டாக்டர் மிஸ்ரா, துணை முதல்வர் கபீல் ஆகியோர் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த நிலையில், கோரக்பூர் சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது. மருத்துவ கல்லூரியில் குழந்தைகள் பலியானது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.