ராகுல் காந்தியிடம் நள்ளிரவு 12 மணி வரை விசாரணை நடத்தியது தவறு - அசோக் கெலாட்

ராகுல் காந்தியிடம் நள்ளிரவு 12 மணி வரை விசாரணை நடத்தியது தவறு - அசோக் கெலாட்
ராகுல் காந்தியிடம் நள்ளிரவு 12 மணி வரை விசாரணை நடத்தியது தவறு - அசோக் கெலாட்

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ஆஜரான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவு 12 மணி வரை விசாரணை நடத்தியது தவறு என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம், அசோசியேட்ஸ் ஜேர்னல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு விலைக்கு வாங்கியது. இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ஜூன் 13-ம் தேதி ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு தனது கட்சியினருடன் ராகுல் காந்தி நேற்று ஊர்வலமாக வந்தார். காலை 11.10 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நுழைந்த ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை நடத்தினர். 10 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையை அடுத்து, இரவு 11.30 மணிக்கே ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.

ராகுலிடன் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான், ஆனால் நள்ளிரவு 12 மணி வரை யாரையாவது கேள்வி கேட்பது தவறு. பாஜகவாக இருந்தாலும் சரி, ஆர்எஸ்எஸ்ஸாக இருந்தாலும் சரி, எல்லோரும் கொள்ளையடிக்கிறார்கள், கோடி கோடியாக கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில், அமலாக்கத்துறை விசாரிப்பதில்லை. கடவுள் உங்களுக்கு நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை கொடுத்துள்ளார் என்று பிரதமர் மோடியிடம் கூற விரும்புகிறேன். பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், பதற்றம், வன்முறை ஆகியவை குறித்து பிரதமர் முன் வந்து உரையாற்ற வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com