“பிடிக்கவில்லையா?; பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் நஸிருதீன் ஷா” - சிவசேனா

“பிடிக்கவில்லையா?; பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் நஸிருதீன் ஷா” - சிவசேனா
“பிடிக்கவில்லையா?; பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் நஸிருதீன் ஷா” - சிவசேனா

பிரபல இந்தி நடிகர் நஸிருதீன் ஷா பாகிஸ்தானுக்குச் சென்று வாழலாம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. 

பிரபல இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா. நடிப்புக்காக தேசிய விருதை பெற்றுள்ள இவர், மத்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வரும் நஸ்ருதீன், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி நடந்து கொண்ட செயல் பற்றி கடுமையாகச் சாடியிருந்தார். ‘கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, மோசமான நடத்தை கொண்டவரும்தான்’ என்று கூறியிருந்தார். இதற்கும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியன.

உத்தரப் பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரியும் இளைஞரும் கொல்லப்பட்ட விவகாரம் பற்றி, “போலீஸ் அதிகாரியின் கொலையை விட பசுக்களின் இறப்பு அதி முக்கியமாகப் பேசப்படுகிறது’’ என்று நஸிருதீன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் சார்பில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்று வரும் இலக்கிய விழாவை அவர் தொடக்கி வைப்பதாக இருந்த நிலையில், இந்து அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், அந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என்று விழா குழுவினரே தெரிவித்துவிட்டனர். 

இந்நிலையில், இந்தியாவில் இருப்பது ஏதுவாக இல்லையென்றால், நஸிருதீன் ஷா பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளார் மணிஷா கயண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “நஸிருதீன் ஷா ஒரு நல்ல நடிகர். அவருடைய ஒரு படத்தில், பாகிஸ்தான் ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அவர் தற்போது அந்த காதாபாத்திரமாகவே மாறிவருகிறார். 

நஸிருதீன் ஷா போன்று ஏற்கனவே அமீர் கானும் இதுபோன்று பேசியுள்ளார். இவர்கள் இந்தியாவில் எல்லா பலனையும் பெற்று மகிழ்ச்சியாக இருந்து கொண்டு, இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். இங்கு இருப்பது திருப்தியாக இல்லயென்றால் பாகிஸ்தானுக்கு சென்று வாழட்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com