‘பூரி’ தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி?
மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகவே இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற அறிவிப்புகளும், யூகங்களும் வெளியாகத் தொடங்கிவிட்டன.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக உள்ளார். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் கரீம் நகர் தொகுதியில் தற்போதைய எம்பி வினோத் குமார் மீண்டும் போட்டியிடுவார் என டிஆர்எஸ் கட்சி அறிவித்துள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும் அக்கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் பீகாரின் பாடலிபுத்ரா தொகுதியில் லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதை லாலுவின் மகனும் மிசாவின் சகோதரருமான தேஜ் பிரதாப் தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்த இறுதி முடிவை கட்சித் தலைவர் லாலு பிரசாத் எடுப்பார் என தேஜ்பிரதாப் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா மாநிலம் பூரியிலிருந்து இம்முறை மக்களவைக்கு போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை போல இம்முறை வட மாநிலங்களில் இருந்து அதிக தொகுதிகளில் வெல்ல முடியாது என பாஜக கருதுவதாகவும் எனவே ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அதிக கவனம் செலுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக வாரணாசியை போல மற்றொரு கோயில் நகரமான பூரியில் மோடி போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மக்களவைதேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று அதற்கான திட்டங்களை பாஜக வகுத்து வருகிறது. அதன் அடிப்படையில் பிரபலமான நபர்களை தேர்தலில் களமிறக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது