3 நாள் அரசுமுறைப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேல் செல்கிறார். இந்த பயணம், இரு நாடுகள் உறவை மேம்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறும் நரேந்திர மோடி அங்கு ஜூலை 6 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவை தவிர அந்நாட்டு அதிபர் ராய்வென் ருவி ரிவ்லினையும் மோடி சந்திக்கவுள்ளார். இந்திய-இஸ்ரேல் தொழிலதிபர்கள் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மத்தியிலும் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
தமது பயணம் தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பயணம் இருநாட்டு மக்களுக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் என கூறியுள்ளார். இந்திய-இஸ்ரேல் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவு உறுதிபூண்டிருப்பதாக மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இருநாடுகளும் பயனடையும் வகையில் அனைத்து துறைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் வசிக்கும் இந்திய மக்களுடன் கலந்துரையாடுவதை எதிர்நோக்கி இருப்பதாகவும் மோடி தமது அறிக்கையில் கூறியுள்ளார். ஜூலை 6 ஆம் தேதி தனது இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகருக்கு செல்லவுள்ளார். அங்கு நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.