புதுச்சேரியில் திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கலாகுமா? ஆளுநர் - முதல்வர் இடையே எழும் சர்ச்சை

புதுச்சேரியில் திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கலாகுமா? ஆளுநர் - முதல்வர் இடையே எழும் சர்ச்சை
புதுச்சேரியில் திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கலாகுமா? ஆளுநர் - முதல்வர் இடையே எழும் சர்ச்சை

திட்டமிட்டபடி இன்று புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு உரிய ஒப்புதல் பெறாததால் வேறு தேதிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய கிரண்பேடி உத்தரவிட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 30-ம் தேதி அரசின் 3 மாத செலவினங்களுக்கு ரூ.2,042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டுக்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் ஜூலை 30-ம் தேதிக்குள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு முடிவெடுத்தது. இதற்காக ரூ.9,500 கோடிக்கு பட்ஜெட் மதிப்பீடு செய்து மத்திய அரசு ஒப்புதலுக்கு புதுவை அரசு அனுப்பியது. ஊரடங்கால் மாநில வருவாய் குறைவை சுட்டிக்காட்டி மதிப்பீட்டை குறைத்து அனுப்பும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதனையடுத்து, புதுச்சேரி அரசு ரூ.9,000 கோடிக்கு பட்ஜெட் மதிப்பீடு செய்து அனுமதிக்காக அனுப்பி வைத்தது. ஆனால், இதற்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு தொடர்ந்து பேசி வந்தார். நீண்ட இழுபறிக்கு பின்னர் புதுவை அரசு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய தினம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரைக்கு பிறகு, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி 2020-21 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என சட்டப்பேரவை செயலகம் அறித்திருந்தது.

ஆனால் துணைநிலை ஆளுநர் உரைக்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமிக்கு நேற்று இரவு எழுதியுள்ள கடிதத்தில் “துணை நிலை ஆளுநர் உரை தமக்கு தாமதமாக கிடைக்கப்பெற்றது. பட்ஜெட்டுக்கான ஒப்புதல் இதுவரை தன்னிடம் பெறவில்லை. யூனியன் பிரதேச சட்டப்படி பட்ஜெட்டுக்கான ஒப்புதலை பெறவேண்டும். எனவே வேறு ஒரு தினத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் “கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன். துணைநிலை ஆளுநரின் கடிதத்தை ஏற்க மறுக்கவில்லை. நேற்றிரவு 10 மணிவரை துணைநிலை ஆளுநரின் கடிதம் கிடைக்கவில்லை. ஏற்கெனவே பட்ஜெட் தாக்கல் தேதி முடிந்து 20 நாட்கள் ஆகிவிட்டது. இதனால் புதுச்சேரி அரசும், மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்குமா நடக்காதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருந்தாலும் ஆளுநர் உரை ஆற்றவில்லை என்றாலும் முதலமைச்சர் பஜ்டெட்டை தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com