கொடுமைக்கார மனைவிகளிடம் இருந்து காக்க ‘புருஷா கமிஷன்’

கொடுமைக்கார மனைவிகளிடம் இருந்து காக்க ‘புருஷா கமிஷன்’
கொடுமைக்கார மனைவிகளிடம் இருந்து காக்க ‘புருஷா கமிஷன்’

கொடுமைக்கார மனைவிகளிடமிருந்து கணவன்களை பாதுகாக்கவும், ஆண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ‘புருஷா கமிஷன்’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

ஆந்திர பிரதேச மகிளா கமிஷனின் தலைவியும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரான  நன்னாபேனி ராஜகுமாரி சமீபத்தில் இந்தக் கோரிக்கை முன் வைத்து இருந்தார். ஆண்களின் நலனுக்காக ‘புருஷா கமிஷன்’ என்ற பெயரில் தனியாக ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண்களின் அராஜகத்திலிருந்து ஆண்களை காக்க இந்த ஆணையம் துணை நிற்கும். கடந்த சில நாட்களாக தவறான உறவை நம்பி போகும் மனைவிகள் ஆண்களை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்கவே ‘புருஷா கமிஷன்’ அமைக்கப்படும். ஆண்களுக்கும் சமமான அளவு நியாயம் கிடைக்கவும், ஆண்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதை தடுக்கவும், இந்த கமிஷன் உருவாக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

அப்போது டிவி சீரியல்களையும் கடுமையாக தாக்கிப் பேசினார். “பெண்கள் மிகவும் கொடூரமானவர்களாக மாறுவதற்கு முக்கிய காரணமாக டிவி சீரியல்கள் தான் உள்ளது. டிவி சீரியல்களை பார்த்து, அதன் பாதிப்பில் தான் அப்படி மாறுகிறார்கள். டிவி சீரியல்களில் பெண்கள் அதிக அளவில் வில்லிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். சீரியல்கள் தற்போது பயங்கரமாக உள்ளது” என்று நன்னாபேனி ராஜகுமாரி சாடினார்.

இந்நிலையில், நாள்தோறும் ஆண்களால் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வரும் நிலையில், நன்னாபேனி ராஜகுமாரியின் இந்தக் கருத்து ஏற்க முடியாதது என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், பெண்கள் முன்னேற்ற அமைப்பு உள்ளிட்டவை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com