ஜனசேனா வேட்பாளர், நந்தியால் எம்.பி, எஸ்.பி.ஒய் ரெட்டி மரணம்!
ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனசேனா கட்சியின் வேட்பாளருமான எஸ்.பி.ஒய் ரெட்டி நேற்று நள்ளிரவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 69.
ஆந்திர மாநிலம் நந்தியால் மக்களவைத் தொகுதி எம்.பி, எஸ்.பி.ஒய் ரெட்டி. தொழிலதிபரான இவர், 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் நந்தியால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அதில் இருந்து விலகி சந்திராபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அந்தக் கட்சியில் இருந்தும் விலகி, நடிகர் பவன் கல்யாண் தொடங்கிய ஜனசேனா கட்சியில் இணைந்தார்.
அந்தக் கட்சியின் சார்பில் நந்தியால் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கினார். இதற்கிடையே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பிரசாரத்திலும் பங்கேற்கவில்லை. கடந்த மாதம் 3 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள கார்பரேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நள்ளிரவில் மரணமடைந்தார்.
நந்தி குழும நிறுவனங்களில் தலைவரான மறைந்த எஸ்.பி.ஒய் ரெட்டி, காங்கிரஸ், பாஜக கட்சிகளிலும் இருந்துள்ளார்.