தேர்தல் முடிந்த நிலையில் நமோ டிவி ஒளிப்பரப்பு திடீர் நிறுத்தம்
தேர்தல் முடிந்துள்ள நிலையில், நமோ டிவியில் ஒளிபரப்பு திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் ஆரம்பிக்கப்பட்ட நமோ டிவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பை தொடங்கியது. பிரதமர் மோடியின் பேச்சு மற்றும் சாதனைகளை தொடர்ந்து ஒளிபரப்பி வந்தது இந்த சேனல். தேர்தல் நேரத்தில் நமோ சேனல் தொடங்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
தேர்தல் விதி மீறல் என்றும் குற்றம்சாட்டின. தலைமை தேர்தல் அதிகாரியும் விளக்கம் கேட்டு நமோ டிவிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி முடிவடைந்தது. தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதி நிறைவடைந்ததுமே, நமோ சேனலின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, ’’பாஜகவின் பிரசாரத்துக்காகத்தான் இந்த டிவி தொடங்கப்பட்டது. தேர்தல் முடிந்து விட்ட தால் இனி அதன் சேவை தேவைப் படவில்லை. 17-ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பை நிறுத்திவிட்டது” என்று தெரிவித்தார்.