’20 வயதில் திருமணம்’ - ஸ்ரீதர் வேம்புவின் பதிவுக்கு நமீதா தாபர் கடுமையான விமர்சனம்!
ஸ்ரீதர் வேம்பு பதிவுக்கு, ஷார்க் டேங்க் இந்தியா நீதிபதியான நமீதா தாப்பர் கடுமையான விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவியும் அப்போலோ நிர்வாகத்தின் துணைத் தலைவருமான உபாசனா, ”ஹைதராபாத்தில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.'எத்தனை பேர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்' என்று அவர்களிடம் நான் கேட்டபோது மாணவிகளைவிட பெரும்பாலான மாணவர்கள் கை தூக்கி தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். மாணவிகள் அதிகமாக தங்கள் கல்வி மற்றும் வேலையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுதான் புதிய முற்போக்கான இந்தியா. தொலைநோக்குப் பார்வையை அமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் இலக்குகளை வரையறுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பணியில் ஈடுபாடு இருக்கும்போது உங்களை யாரும் தடுக்க முடியாது” எனப் பதிவிட்டிருந்தார்.
அவருடைய பதிவை ZOHO நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்து, ”நான் சந்திக்கும் இளம் தொழில்முனைவோர்கள் அதாவது ஆண்கள், பெண்கள் இருவருமே அவர்களது 20களில் (20- 29 வயது) திருமணம் செய்துகொண்டு குழந்தைகளையும் பெற்றுக்கொள்ளவும் திருமணம் மற்றும் குழந்தை பெற்றலைத் தள்ளிப்போடாமல் இருக்கவும் நான் அறிவுறுத்துகிறேன் .சமூகத்திற்கும் தங்கள் மூதாதையர்களுக்கும் மக்கள்தொகைக்கான கடமையைச் செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் கூறி வருகிறேன். இந்தக் கருத்துக்கள் விசித்திரமாகவோ அல்லது பழமையானதாகவோ தோன்றலாம், ஆனால், இந்தக் கருத்துக்கள் மீண்டும் எதிரொலிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். அவருடைய இந்தப் பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.
இந்த நிலையில், ஸ்ரீதர் வேம்பு பதிவுக்கு ஷார்க் டேங்க் இந்தியா நீதிபதியான நமீதா தாப்பர் கடுமையான விமர்சனத்தைத் தெரிவித்துள்ளார். அவர், “செல்வாக்குள்ள ஒரு தலைவர், உண்மையான பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அவர் தனது குரலை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். உங்களுடைய 20களில் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்ற பதிவை, நான் படித்தபோது அதிர்ச்சியடைந்தேன். ஆனால், எனக்கு, இது 70 மணிநேர வேலை போன்றது. நீங்கள் எண்களை மிகவும் விரும்புவதால், அடுத்த முறை நீங்கள் அறிவுரை கொடுக்கக்கூடிய இரண்டு உண்மையான எண்களை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். ஒன்று, 57 சதவிகித பெண்களுக்கு ரத்தசோகை உள்ளது. இரண்டு, 20 சதவிகிதத்திற்கும் குறைவான பெண்கள் பணியிடத்தில் பங்கேற்கிறார்கள்.
மேலும் இந்த இரண்டு எண்களும் பல ஆண்டுகளாக மாறவில்லை. இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதன் மூலம் தலைவர்கள் நம் பெண்களிடம் தங்கள் கடமையைச் செய்வதைக் கேட்க ஆவலாய் உள்ளேன். ஒரு வணிகத் தலைவர், நமது இருபதுகளில் திருமணம் செய்துகொள்வது நமது கடமை என்று கூறுவதை நான் கேள்விப்பட்டேன். கடமையா? இந்தக் கடமையை நிறைவேற்ற பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். நமது உடல்நலம் நமது தேவைகள் மற்றும் நமது கனவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் நமது கடமை என்ன? அந்தச் செயல்பட்டில் நாம் தாமதமாக திருமணம் செய்தால், அது அப்படியே இருக்கட்டும். நமது தலைவர்களுக்கு என்ன தவறு” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

