ஒரே வருடத்தில் 25 ஊர்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல்!
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 25 நகரம் மற்றும் கிராமங்களின் பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
சமீப காலமாக முக்கியமான நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் அலகாபாத் நகரம் பிரயாக்ராஜ் என்றும் பைசாபாத் மாவட்டம் அயோத்தி என்றும் மாற்றப்பட்டது. இதையடுத்து பல்வேறு நகரங்களின் பெயரை மாற்ற கோரிக்கைகள் விடுக்கப் பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 25 நகரம் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி ஆந்திராவின் ராஜமுந்திரி, ராஜமகேந்திரவரம் என்றும், ஒடிசாவின் வீலர் தீவு, ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தீவு என்றும் கேரளாவின் அரிக்கோடு, அரீக்கோடு என்றும் பெயர் மாற்றப்பட்டு இருக்கின்றன.
இதைப்போல ஹரியானாவின் பிண்டாரி, பண்டு–பிண்டரா என்றும் நாகாலாந்தின் சம்புர், சன்பூர் எனவும் பெயர் மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை ‘பங்ளா’ என மாற்றக்கோரும் பரிந்துரை நிலுவையில் இருக்கிறது. இதே போல இன்னும் பல ஊர்களின் பெயரை மாற்ற கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.