55 ஆண்டுகள் பெண் எம்எல்ஏக்கள் காணாத நாகாலாந்து சட்டப்பேரவை

55 ஆண்டுகள் பெண் எம்எல்ஏக்கள் காணாத நாகாலாந்து சட்டப்பேரவை
55 ஆண்டுகள் பெண் எம்எல்ஏக்கள் காணாத நாகாலாந்து சட்டப்பேரவை

55 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நாகாலாந்து சட்டப்பேரவைக்கு இதுவரை ஒரு பெண் கூட எம்எம்ஏவாக தேர்வாகவில்லை.

நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாகாலாந்தில் மொத்தமாக 60 தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 31 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் அங்கு தொங்கு சட்டசபை நிலவுகிறது. அதிக இடங்கள் வெற்றி கண்டுள்ள நாகா மக்கள் முன்னணி (27 இடங்கள்) பாரதிய ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்து உள்ளது. எனவே அங்கு கூட்டணி ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் 55 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நாகாலாந்து சட்டப்பேரவைக்கு இந்த முறையும் கூட, பெண் ஒருவர் எம்எல்ஏவாக செல்ல முடியாத நிலை உள்ளது. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு சுயேட்சை பெண் வேட்பாளர் உள்பட மொத்தம் 5 பெண் வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆனால் இவர்கள் யாருக்குமே வெற்றி கிடைக்கவில்லை. எனவே இந்த முறையும் நாகாலாந்து சட்டப்பேரவையில் ஆண்கள் மட்டுமே நிறைந்து இருப்பார்கள்.

பல துறைகளில் ஜொலித்து வரும் பெண்கள் அரசியலிலும் தங்கள் காலடி தடங்களை வெவ்வேறு மாநிலங்களில் பதித்து வருகின்றனர். எத்தனையோ பிரதமர் வந்தாலும் இந்திரா காந்திக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆணாதிக்கம் மிக்க இந்த சமுதாயத்தில் தனி ஒரு பெண்ணாக அதிரடி காட்டியர் இந்திரா காந்தி. அவர் மட்டுமில்லாமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி உள்ளிட்டோர் அரசியலில் தங்களுக்கென்று ஒரு தனித்துவத்தை கொண்டவர்கள். பல்வேறு மாநிலங்களில் பெண்கள் அரசியலில் ஜொலித்தாலும் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இதுவரை ஒரு பெண் எம்எல்ஏ கூட தேர்வாகாதது வருத்தமே. இம்மாநிலத்தில் கடந்த 1977-ம் ஆண்டு ஷாயிசா என்ற பெண் ஒருவர் மட்டுமே மக்களவை உறுப்பினராக தேர்வாகியிருக்கிறார். இவரைத் தவிர இம்மாநிலத்தில் எந்த பெண்ணுக்கும் இதுவரை தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com