71 வருடங்களுக்கு பிறகு சீக்கிய தம்பியை சந்தித்த இஸ்லாமிய சகோதரிகள்!
குழந்தையாக இருந்தபோது பிரிந்த சகோதர, சகோதரிகள் 71 வருடத்துக்குப் பின் சந்தித்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.
பஞ்சாபில் உள்ள தேரா பாபா நானக் அருகில் உள்ள பராச்சா கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம் 1947 ஆம் ஆண்டு பிரிவினையின் போது பாகிஸ்தான் செல்ல முயன்றது. அப்போது நடந்த மதக் கலவரத்தில் குடும்பத்தினர் பிரிந்தனர். அப்போது தனது மகள்கள் உல்ஃபத் பீவி, மைராஜ் பீவி மற்றும் உறவினர்களுடன் அம்மாவும் அப்பாவும் பாகிஸ்தான் பகுதியில் உள்ள பஞ்சாப்புக்கு சென்றுவிட, மகன் பீன்ட் (Beant) மாயமானார். பாசமான மகனை அவர்கள் தேடி வந்தனர்.
கடைசியில் இந்திய பஞ்சாப் பகுதியில், மகன் சிக்கிக்கொண்டது இன்னொரு உறவினர் மூலம் தெரியவந்தது. இரண்டு குடும்பங்களுக்குமான இடைவெளி வெறும் 4 கிலோமீட்டர்தான். ஆனால் அது பாகிஸ்தான் என்பதால் இங்கிருந்து செல்ல முடியாது. பிறகு கடிதம் மூலமும் போன் மூலமும் அவர்கள் தொடர்பில் இருந்தனர். நேரில் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. பெற்றோர் இறந்த பிறகும் சகோதரிகள் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டனர். தம்பி சீக்கியராகவே இருக்கிறார். அவர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு பாசம் வளர்த்தார். இவ்வளவு வருடத்துக்கு பிறகு அதாவது 71 வருடத்துக்குப் பின் நேற்று அவர்கள் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
சீக்கிய மத குருவான குருநானக், பிறந்த இடம் பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூரில் இருக்கிறது. அந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். அப்படி சென்ற புனிதப் பயணத்தில் பீன்ட்டும் சென்றுள்ளார். அப்போது, தனது சகோதரிகளை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். மூவரும் ஒன்றாகக் கட்டிப்பிடித்துக்கொண்டு பாசத்தைப் பொழிந்தது நெகிழ்ச்சியாக இருந்தது.
இதுபற்றி சகோதரிகளில் ஒருவரான உல்ஃபத் பீவி கூறும்போது, இந்தியாவில் உள்ள எனது உறவினர்களை பார்க்க, பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் நீண்ட வருடங்களுக்கு பிறகு இங்கே வந்துள்ள எங்கள் சகோதரரின் விசா காலத்தை பிரதமர் இம்ரான் கான் நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.