இறந்து கிடந்த மாடு... கொளுத்தப்பட்ட முஸ்லிம் வீடு
வீட்டிற்கு வெளியே மாடு இறந்து கிடந்ததால் முஸ்லிம் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் அவரின் வீடும் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை ஒட்டிய கிராமத்தை சேர்ந்தவர் உஷ்மான் அன்சாரி. முஸ்லிம் ஆன இவரது வீட்டின் அருகில் மாடு ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அடையாளம் தெரியாத நபர்கள், உஷ்மான் அன்சாரியை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவரின் வீட்டையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். தக்க சமயம் வந்த போலீசார், உஷ்மான் அன்சாரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக அக்கிராமத்தை சேர்ந்த 15 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
டெல்லியில் மாட்டிறைச்சியை ரெயிலில் எடுத்துச் சென்றததற்காக 16 வயது இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்கள் அண்மையில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இறந்து கிடந்த மாட்டிற்காக மனிதர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.