'முத்தலாக்' முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாப்பானதா?
இஸ்லாமிய மதச் சட்டத்தில் முத்தலாக் எனும் விவாகரத்து முறை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய இந்த நடைமுறை இஸ்லாமியப் பெண்களுளின் உரிமைகளைப் பறிக்கிறதா?
இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் தலாக் என மூன்று முறை கூறி விவாகரத்து செய்யும் முறையே முத்தலாக் எனப்படுகிறது. ஷரியத் சட்டங்களின் படி, முத்தலாக் முறையை பின்பற்றி திருமண உறவை முறிக்க பல்வேறு கட்ட நடைமுறைகள் இருப்பதாக இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், அதுகுறித்து போதிய புரிதல் இல்லாத இஸ்லாமியர்கள்தான் தலாக் முறையை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார் பேராசிரியை ஜெசிமா. ஒரே முறை முத்தலாக் கூறி பிரிய முடியாது என்கிறார்.
ஆண்கள் மனைவியை விவகாரத்து செய்ய முத்தலாக் முறை உள்ளதைப் போன்றே, பெண்கள் தங்களது கணவரை விவாகரத்து செய்வதற்கு “குலா” எனும் முறை பின்பற்றப்படுவதாகக் கூறுகிறார் பேராசிரியை சலினா. இஸ்லாமிய மதச் சட்டங்களில், பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்பது, குலா முறையில் தெரியவருகிறது. தலாக் முறை அரசியலாக்கப்படுகிறது. முத்தலாக் முறை பெண்களுக்கு பாதுகாப்பானதே என்கிறார் அவர்.
முத்தலாக் குறித்து முஸ்லிம்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் வேளையில், தவறான தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு, ஜமாத் மூலம் உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர் இஸ்லாமிய மாணவர் அமைப்பினர்.
முத்தலாக் பற்றி மக்களிடையே பெரும்பாலும் தவறான கருத்துகளே பரப்படுவதாகவும் இஸ்லாமிய அறிஞர்களும், அமைப்பினரும் கூறுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் விதமான வாழ்வியல் நடைமுறைகளைக் கொண்ட ஷரியத் சட்டங்கள், அரசியல் காரணங்களுக்காகத்தான் விமர்சிக்கப்படுகிறது என்பதே பெரும்பாலான இஸ்லாமியர்களின் கருத்தாக உள்ளது.