"ஏன் நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறீர்கள்?" - பிகாரில் முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை!

"ஏன் நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறீர்கள்?" - பிகாரில் முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை!
"ஏன் நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறீர்கள்?" - பிகாரில் முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை!

பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் சமஸ்திபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது கலீம் ஆலம் (36). ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினரான இவர், இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்த சூழலில், அவரது உடல் அங்குள்ள ஏரிக்கரையோரத்தில் எரிந்த நிலையில் கடந்த 19-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், முகமது கலீமை சிலர் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில், முகமது கலீம் மண்டியிட்ட நிலையில் கைகளை கட்டியபடி இருக்கிறார். அப்போது அவரை சுற்றியிருந்த மர்மநபர்கள், "ஏன் நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறீர்கள்?", "இதுவரை உன் வாழ்நாளில் எத்தனை கிலோ மாட்டுக் கறியை உண்டிருப்பாய்?" என்பன போன்ற கேள்விகளை கேட்டு, அவரை சரமாரியாக தாக்குகின்றனர். சுமார் இரண்டரை நிமிடம் ஓடும் இந்த வீடியோவானது, பிகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வீடியோவில் கலீமை தாக்கும் நபர்களே, அவரை அடித்துக் கொலை செய்து அவரது சடலத்தை எரித்துள்ளனர் என ஒருசாரார் குற்றம்சாட்டி வருகின்றனர். எனினும், இதனை போலீஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். கடன் கொடுக்கல் வாங்கல் தகராறில்தான் கலீம் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த சம்பவத்துக்கு மதச்சாயம் பூச சிலர் முயல்வதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பிகாரில் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்த சம்பவம் தொடர்பான பத்திரிகை செய்தியை முதல்வர் நிதிஷ் குமாருக்கு ட்விட்டரில் 'டேக்' செய்து, "பிகாரில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டிருப்பது, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பிகாரில் ஏன் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என முதல்வர் நிதிஷ்குமார் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார். பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com