இந்து கோயிலுக்கு 20 ஆண்டுகளாக வெள்ளி சிலை வழங்கும் இஸ்லாமியர்
குஜராத்தில் ஜெகன்நாத் கோயில் ரத யாத்திரை தொடங்க இருக்கும் நிலையில் இஸ்லாமிய நபர் ஒருவர் வெள்ளி ரதத்தை அக்கோயிலுக்குப் பரிசாக அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புகழ்பெற்ற ஜெகன்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வரும் 4ஆம் தேதி முதல் ரத யாத்திரை திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இக்கோயிலுக்கு ஜாமால்பூர் நகரை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் வெள்ளியிலான ரத சிலை ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இதுகுறித்து பரிசு கொடுத்த ரவூஃப் பங்காலி, “இந்த வெள்ளி சிலையை நாங்கள் கடந்த 20 ஆண்டு காலமாக கொடுத்து வருகிறோம். குறிப்பாக கோத்ரா கலவரத்திற்குப் பிறகு இரு சமூகத்தினரிடையே அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்துவருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலுக்கு ஜெகன்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகர், “இவர் நெடுங்காலமாக இந்த வெள்ளி சிலையை ரத யாத்திரைக்கு முன்பு அளித்து வருகிறார். அங்குள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். மேலும் அனைவரும் எந்தவித சண்டைகளுமின்றி அமைதியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.