’கையை இறுக்கியா கட்டுவது?’ பரிசோதனை கருவியால் மருத்துவரை தாக்கிய கர்ப்பிணி!
ரத்த அழுத்த பரிசோதனை கருவியால் மருத்துவரை தாக்கினாலும், அந்தக் கர்ப்பிணிக்கு அழகாக பிரசவம் பார்த்து கடமை ஆற்றியிருக்கிறது, தானே அரசு மருத்துவமனை
மகாராஷ்ட்ரா மாநிலம் தானே அருகில் உள்ள மன்பாடா பகுதியில் உள்ள மனோரமா நகரைச் சேர்ந்தவர் ரிங்கி யாதவ் (30). கர்ப்பிணியான இவர், தானே அரசு மருத்துவ மனையில் பிரசவத்துக்காக கடந்த புதன்கிழமை சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவர் தனஸ்ரீ கெல்கர் பரிசோதனை செய்தார். அவரது ரத்த அழுத்தத்தை சோதித்தபோது ரிங்கியின் கையை அந்த கருவி இறுக்கியதாகத் தெரிகிறது. ‘அதிகமாக இறுக்கி விட்டீர்கள், வலிக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார் ரிங்கி. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் மருத்துவர் தனஸ்ரீ.
முடியாத ரிங்கி, டாக்டரை தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்தார். பின்னர் ரத்த பரிசோதனை கருவியால் மருத்துவரின் தலையில் ஓங்கி தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்தார், மருத்துவர். அவர் மூக்கில் இருந்தும் காதில் இருந்தும் ரத்தம் கொட்டியது. உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள், மருத்துவரை மீட்டு சிகிச்சை அளித்தனர். மருத்துவரை தாக்கியதால், ரிங்கியும் அவர் குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
(டாக்டர் தனஸ்ரீ)
ஆனால், மற்ற மருத்துவர்கள், இப்போது வெளியே சென்றால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, அந்த மருத்துவமனையிலேயே அனுமதித்தனர். இதையடுத்து ரிங்கி மீது கல்வா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே மருத்துவரை தாக்கினாலும் ரிங்கிக்கு சரியான சிகிச்சையளித்து வந்தனர், மற்ற மருத்துவர்கள். இந்நிலையில் அறுவை சிகிச்சை மூலம் நேற்று அழகான குழந்தை பிறந்துள்ளது ரிங்கிக்கு. தாயும் சேயும் நலம் என்கிறது அந்த மருத்துவமனை!